தமிழக செய்திகள்

அதிமுக கொறடா விவகாரம்: உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

இரு தரப்பு மனுக்களும் ஆய்வு செய்யப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.

சென்னை,

தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு உள்ளது. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று ஒரு தரப்பும், எஸ்.பி.வேலுமணிதான் என்று மற்றொரு தரப்பும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் முதல் முடிவு எடுக்க வேண்டியது சபாநாயகர் தான்? ஏனென்றால் அவர்தான் கட்சி கொறடா யார்? என்பதை முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.

ஆனால் அதில் தான் பெரும் பிரச்சினை இருக்கிறது. ஏனென்றால் இருதரப்பும் தங்களுக்கான ஆதரவு கடிதங்களை கொடுத்து இருக்கிறார்கள். அதில் சுவாரசியம் என்னவென்றால் எடப்பாடி பழனிசாமி தனக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது என்று அவர்களின் கையெழுத்தோடு கடிதம் கொடுத்து இருக்கிறார். அதேபோல பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கையெழுத்தோடு, எஸ்.பி.வேலுமணியும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து இருக்கிறார்.

அதாவது இரு கடிதங்களிலும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துக்கள் இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கப்போகும் முடிவுதான், சட்டசபையில் அ.தி.மு.க.வின் தலைமை யார் என்பதனை முடிவு செய்யும். ஆனால் சபாநாயகர் என்ன முடிவு எடுக்க வேண்டும்? எப்போது முடிவு எடுக்க வேண்டும் என்பதனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. இது அவருடைய தனிப்பட்ட அதிகார முடிவாகும்.

இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக கொறடா விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து சபாநாயகர் பேசியதாவது;

”அதிமுக கொறடா விவகாரத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பு மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு என இரு தரப்பில் இருந்தும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு மனுக்களும் ஆய்வு செய்யப்படும். இந்த விவகாரம் தொடர்பாக உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.