தமிழக செய்திகள்

பாமக இல்லையென்றால் அதிமுக 47 தொகுதி வென்றிருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை மக்கள் புறக்கணித்து விட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.

கோவை,

கோவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

திமுக ஒரு கொள்கை கட்சி என சொல்லிக் கொள்கிறது; ஆனால், திமுக எப்போதுமே கொள்கை ரீதியான பிரசாரத்தை உருவாக்கியது இல்லை. ஆபாசம், அவதூறு பிரசாரத்தைத்தான் உருவாக்கி இருக்கிறார்கள். உதயநிதி ஆபாசப் பேச்சை மட்டுமே முன்னெடுக்கிறார். திமுகவின் ஆபாசப் பேச்சுகளை மக்கள் தூக்கி எறிவார்கள்.

தற்போது இருக்கும் அதிமுக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது இல்லை. ஜெயலலிதாவிடம் விசுவாசியாக இருந்தவர்கள் அதிமுகவை விட்டு வெளியேறி விட்டார்கள். பாமக இல்லை என்றால் அதிமுக 47 தொகுதிகளில் வென்றிருக்க முடியாது. திமுகவுடன் சேர்ந்து கொண்டு முதல்-அமைச்சர் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி தொகுதியில் எங்கள் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி விலை கொடுத்து வாங்கி, அதிமுகவில் இணைத்துள்ளார். இது குதிரை பேரம் இல்லையா? தற்போது அதிமுகவில் இருவர் தான் இருக்கிறார்கள். ஒன்று, பழனிசாமி, மற்றொன்று அவரது மகன் மிதுன்.

தற்போது, பழனிசாமியின் மகன் மிதுன்தான் அதிமுகவை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அதிமுகவின் சொத்துகளை அபகரிக்க எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் திட்டமிட்டுள்ளார். மகனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்காக உதயநிதியுடன் கைகோத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடிபழனிசாமி தலைமையிலான அதிமுகவை மக்கள் புறக்கணித்துள்ளார்கள். திமுகவின் பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்; திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின். திமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இனிமேல், கொங்கு மண்டலத்தின் முகமாக முதல்-அமைச்சர் விஜய் இருப்பார்”

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT