தமிழக செய்திகள்

அ.தி.மு.க.வின் 55-வது ஆண்டுவிழா: தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை,

அ.தி.மு.க.வின் 55-வது ஆண்டுவிழாவையொட்டி, சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க.வினர் இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

மேலும், ‘Dravidian Phoenix’ என்ற புத்தகத்தை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்நிலையில், அ.தி.மு.க.வின் 55-வது ஆண்டுவிழாவையொட்டி, கட்சி தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரி. தியாகத்தால் உருவாகி, புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் தீரத்தால் கட்டிக் காக்கப்பட்ட நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 54 ஆண்டுகாலப் பெருமைமிகு வரலாற்றை நிறைவு செய்து, 55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தப் பொன்னான தருணத்தில், என் பேரன்பிற்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்!

“இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்!” என்று நம் புரட்சித் தலைவி அம்மா முழங்கிய வரலாற்றுப் பிரகடனத்தை நனவாக்கும் உறுதியோடு, நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!

இதற்கு முன்பு எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட என் அன்பிற்குரிய கழகத் தோழர்களே! புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே!

இன்றைக்கு நம் முன்னால் எழுந்திருக்கும் புதிய அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட, ஒற்றுமையோடும், உறுதியோடும் களமிறங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறேன்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காட்டிய பாதையில் ! புரட்சித் தலைவி ஜெயலலிதா வகுத்துத் தந்த லட்சிய வழியில்! தமிழகத்தின் உரிமைகளைக் காத்து, மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்!”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT