தமிழக செய்திகள்

4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கேட்டு அ.தி.மு.க. வழக்கு.. ஐகோர்ட்டில் நாளை விசாரணை

4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

சென்னை,

த.வெ.க.வுக்கு அ.தி.மு.க. ஆதரவு

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தது. தி.மு.க. 59 இடங்களையும், அ.தி.மு.க. 47 இடங்களையும் கைப்பற்றின.

தேர்தலுக்கு முன்பு தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளான காங்கிரஸ், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அளித்த ஆதரவின் அடிப்படையில், த.வெ.க. ஆட்சி அமைத்தது. விஜய் முதல்-அமைச்சரானார்.

பின்னர் கடந்த மாதம் 13-ந்தேதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, சபாநாயகரிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்தார்.

இதனிடையே, மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்தனர்.

அவர்களின் ராஜினாமா கடிதங்களை உடனடியாக சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதுகுறித்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் வக்கீல் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார்.

ஏற்க முடியுமா?

அந்த மனுவில், 'தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளபோது, அதனை தவிர்க்கும் வகையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை ஏற்க முடியுமா? என்ற அரசியல் சாசன கேள்வி எழுந்துள்ளது. தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளபோது, ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டது. கட்சித்தாவல் தடை சட்டத்தையும், தேர்தலில் வாக்களித்த மக்கள் தீர்ப்பையும் நீர்த்துப் போகச்செய்யும் வகையில் உள்ளது.

கட்சித்தாவல், ராஜினாமா காரணமாக அடுத்தடுத்து தேர்தல்கள் நடத்த வேண்டியுள்ளதால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே. அ.தி.மு.க.வில் இருந்த எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுக்களை விசாரித்து, முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும்

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.ஆர்.ராஜகோபால், 'இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்கக்கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார். 4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்று அந்த தொகுதிகள் காலியானதாக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

இந்த வழக்கு விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட அந்த 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு இன்னும் எண்ணிடப்படவில்லை. எனவே வழக்கு எண்ணிட்ட பிறகு அதனையும் சேர்த்து நாளை அல்லது நாளை மறுநாள் இந்த வழக்குகளை விசாரிக்கவேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.

சபாநாயகர் நோட்டீஸ்

அப்போது குறுக்கிட்ட அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், அ.தி.மு.க.வில் இருந்த 4 எம்.எல்.ஏ.க்களும் அவர்களே தானாக தான் முன்வந்து ராஜினாமா செய்தார்கள். இதுதொடர்பாக அவர்களுக்கு விளக்கம் கோரி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இயற்கை நீதிக்கு உட்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், வழக்கை நாளை (புதன்கிழமை) விசாரிக்கப்படும் என்று கூறி தள்ளிவைத்தனர்.