சென்னை,
புதுப்பொலிவுடன் குளிரூட்டப்பட்ட சென்னை கதர் அங்காடியை மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி பார்வையிட்டார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னை குறளகத்தின் தரைத்தளத்தில் செயல்பட்டு வந்த கதர் அங்காடி (காதி கிராப்ட்), தற்போது குறளகம் அருகிலுள்ள சென்னை இல்லம் முதல் தளத்தில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர்களின் வசதியையும், சிறந்த விற்பனைச் சூழலையும் ஏற்படுத்தும் வகையில், இக்கதர் அங்காடி தற்போது குளிரூட்டப்பட்டு, புதுப்பொலிவுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
இக்கதர் அங்காடியில் அனைத்து வகையான கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களும் 30 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கிராமத் தொழில் பொருட்களான பல்வேறு வகையான சோப்புகள், மார்த்தாண்டம் தேன், காலணி வகைகள், பூஜைப் பொருட்கள், சுகப்பிரியா வலி நிவாரண தைலம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பையும் எடுத்துக்காட்டும் வகையிலான பொருட்களும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி 27.08.2026 அன்று சென்னை கதர் அங்காடியைப் பார்வையிட்டு, அங்காடியின் விற்பனையை மேலும் பன்மடங்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அரசு முதன்மைச் செயலாளர் தி.ந. வெங்கடேஷ், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் முனைவர் சீ. சுரேஷ்குமார், கைத்தறித் துறை ஆணையர் பி. உமா மகேஸ்வரி மற்றும் வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.