தமிழக செய்திகள்

தாம்பரம் ரெயில் நிலையத்தில் குளிர்சாதன காத்திருப்பு அறை

ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவு பகுதியில் இந்த குளிர்சாதன காத்திருப்பு அறை அமைந்துள்ளது.

தாம்பரம்,

தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்கின்றனர். இங்கு பயணிகள் வசதிக்காக ரயில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக குளிர்சாதன காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த காத்திருப்பு அறையை தாம்பரம் ரெயில் நிலைய பொதுமேலாளர் முகமது அப்துல் ரகுமான் திறந்து வைத்தார்.

தாம்பரம் ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவு பகுதியில் இந்த குளிர்சாதன காத்திருப்பு அறை அமைந்துள்ளது. இந்த காத்திருப்பு அறை ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 80 பேருக்கு போதுமான இருக்கை வசதிகள் உள்ளன. இதன் உட்புறத்தில் மிகவும் சொகுசான சோபா இருக்கை வசதி, சாய்வு நாற்காலிகள் மற்றும் பொருட்கள் வைப்பதற்கான ரேக்குகள் ஆகியவை உள்ளன. மேலும் இங்கு பாலூட்டும் அறை வசதியும் உள்ளது.

பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன. மேலும் குடிநீர் வசதி, மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள், இலவச வைபை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ரெயில் விவரங்களை காட்டும் டிஜிட்டல் காட்சி பலகை மற்றும் பொது அறிவிப்பு அமைப்பு ஆகிய வசதிகளும் உள்ளன. இந்த காத்திருப்பு அறை 24 மணி நேரமும் இயங்கும். இந்த அறைக்கு ஒரு மணி நேரத்துக்கான கட்டணம் 35 ரூபாய். 5 முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு ரூ.20 கட்டணம் ஆகும். 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. இதற்கான 5 ஆண்டுகால உரிமம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. நேரடியாக சென்று கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.