தமிழக செய்திகள்

இன்று முதல் துபாயில் இருந்து திருச்சிக்கு மீண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை

இன்று (சனிக்கிழமை) முதல் துபாயில் இருந்து திருச்சிக்கு விமான சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி,

மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக அமீரகத்திற்கு வெளிநாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் இருந்து விமான சேவை அளித்து வரும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ போன்ற நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி முதல் முழு வர்த்தக ரீதியிலான சேவைகளையும் ரத்து செய்தன. இருந்தாலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது.

போர் பதற்றம் தீவிரமடைந்ததால் அந்த சேவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதில் முன்னதாக வருகிற மே மாதம் 1-ந் தேதி முதல் முழுமையான சேவைகள் தொடங்கும் என அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மீண்டும் இன்று (சனிக்கிழமை) முதல் துபாயில் இருந்து திருச்சிக்கு விமான சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான இணையதள முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் மீண்டும் திருச்சிக்கு நேரடி விமான சேவை அமீரகத்தில் இருந்து தொடங்கப்படுவதற்கு பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

துபாயில் இருந்து சர்வதேச விமான நிலைய முனையம் 2-ல் இருந்து ஐ.எக்ஸ் -6622 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அமீரக நேரப்படி மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். முன்னதாக மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து மதியம் 12.10-க்கு புறப்பட்டு பிற்பகல் 2.55 மணிக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு விமான சேவை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விமான சேவை குறித்த தகவல்கள் பட்டியலிடப்படவில்லை. அதற்கு அடுத்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடர்ந்து விமான கட்டணங்களுடன் முன்பதிவுக்கு இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.