ஏர் இந்தியா  
தமிழக செய்திகள்

சென்னை- டெல்லி ஏர் இந்தியா விமானம் ஐந்தரை மணி நேரம் தாமதம்: பயணிகள் தவிப்பு

சென்னையில் இருந்து, சுமார் ஐந்தரை மணி நேரம் தாமதமாக, அதிகாலை 1.30 மணிக்கு, 180 பயணிகளுடன், சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

ஆலந்தூர்,

ஏர் இந்தியா பயணிகள் விமானம், தினமும் மாலை 6.30 மணிக்கு, டெல்லியில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத் திற்கு வந்துவிட்டு, அதன் பின்னர் இரவு 8 மணிக்கு, சென்னையில் இருந்து மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு செல்லும். நேற்று இரவு 8 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில், பயணம் செய்வதற்காக சுமார் 180 பயணிகள் இருந்தனர். அவர்கள் இரவு 7 மணிக்கு முன்னதாகவே, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்துவிட்டனர்.

விமானம் புறப்படவில்லை.

ஆனால் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் எனவும் எதிர்முனையில் வரவேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், தாமதமாக வந்து கொண்டு இருக்கிறது என்றும் அறிவித்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும், சென்னை விமான நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்தனர்.நள்ளிரவு 12 மணி ஆகியும், டெல்லிக்கு செல்ல வேண்டிய, ஏர் இந்தியா விமானம் புறப்படவில்லை.

கடும் அவதி

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து பயணிகளை சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து அந்த விமானம் சென்னையில் இருந்து, சுமார் 5½ மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை 1.30 மணிக்கு, 180 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. விமானம் தாமதத்தால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

SCROLL FOR NEXT