தமிழக செய்திகள்

தமிழகத்தில் 3 இடங்களில் காற்று மாசு;எங்கெங்கே தெரியுமா?

தமிழகத்தின் மற்ற பகுதிகளில், காற்றின் தரக்குறியீடு 50 முதல் 100 வரை பதிவாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அதிகரித்து வரும் தொழிற்சாலைகளில் இருந்து, வெளியேறும் புகை, சாலைகளில் உள்ள மண் புழுதி, வண்டியின் வாகனப்புகை, கட்டுமான பணிகள் உட்பட பல்வேறு காரணங்களால் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

காற்று மாசு அதிகம் உள்ள பகுதியில் வசிப்போருக்கு, நுரையீரல், சுவாச பிரச்சினை என பல்வேறு உடல் நல பிரச்சினைகள் உருவாகும் அபாயம் உள்ளது. காற்று மாசு அளவை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் கணக்கிட்டு அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு தரக்குறியீடு 0-50 என்ற அளவில் இருப்பது, பிரச்சினை இல்லை என்பதை குறிக்கும். தரக்குறியீடு, 50 முதல் 100 வரை இருப்பது திருப்திகரமானது. 101 முதல் 200 வரை மிதமானது. 201 முதல் 300 வரை மோசமானது. 301 முதல் 400 வரை மிக மோசமானது என, காற்று மாசு அளவீடு வகைபடுத்தப்பட்டுள்ளது.

தற்போது தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்துள்ள பகுதியான, சென்னை மணலியில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில், காற்றின் தரக் குறியீடு 200 - 300 வரை பதிவாகிறது.

சில நேரங்களில் 300க்கும் மேல் காற்றின் தரக்குறியீடு பதிவாகிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் 100 -200 வரை; துாத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் பகுதியில், 100 200 வரை காற்றின் தரம் மிதமான மோசம் என பதிவாகி உள்ளது.

சென்னை மணலி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் ஆகிய பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.