சென்னை,
சென்னையில் மாறிய வானிலை காரணமாக காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் நுரையீரல் மற்றும் இதய நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படலாம் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
பருவநிலை மாற்றத்தால் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள தற்காலிக மாறுபாடு, ஆஸ்துமா, சிஓபிடி போன்ற நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இதய நோயாளிகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும். எனவே, அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் காற்று மாசு அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் வெளியே செல்லும்போது, காற்றில் உள்ள நுண்துகள்களைத் தடுக்கும் முகக்கவசங்களை அணிய வேண்டும்.
ஆஸ்துமா மற்றும் அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் இன்ஹேலர்கள் மற்றும் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் உடன் வைத்திருக்க வேண்டும். பூங்காக்கள் மற்றும் திறந்தவெளிகளில் நடைப்பயிற்சி செய்வதைத் தவிர்த்து, வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
மேலும், நெஞ்சுவலி, வழக்கத்திற்கு மாறான மூச்சுத்திணறல் அல்லது கடுமையான இருமல் ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.