தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகையையொட்டி விமான டிக்கெட் விலை உயர்வு

சென்னை-தூத்துக்குடி விமானக் கட்டணம் நாளைய பயணத்திற்கு ரூ.17 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

பயணம்

தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் நாளை முதல் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட உள்ளனர். இதற்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் ரெயில் மற்றும் பஸ்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.

இதனால் பலர் விமானங்களில் பயணம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இதன் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளது.

கட்டணம்

குறிப்பாக, சென்னை-தூத்துக்குடி விமானக் கட்டணம் நாளைய பயணத்திற்கு ரூ.17 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது. மதுரைக்கு ரூ.10 ஆயிரத்து 700, திருச்சிக்கு ரூ.12 ஆயிரம், சேலத்திற்கு ரூ.12 ஆயிரத்து 769 என கட்டணம் அதிகரித்துள்ளது.

கோவைக்கு செல்லும் விமானங்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 ஆயிரமாகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.19 ஆயிரமாகவும் உள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை மறுநாளும் (7-ந்தேதி) தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டணம் பல மடங்கு உயர்ந்தபோதிலும், சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் பயணிகள் விலை உயர்வைப் பொருட்படுத்தாமல் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் நாளைய பயணத்திற்கான விமானங்களில் ஒரு சில டிக்கெட்டுகளே எஞ்சியுள்ளன. அதேவேளையில், சென்னையில் இருந்து ஐதராபாத், மும்பை, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணத்தில் பெரிய அளவில் உயர்வு ஏற்படவில்லை.

SCROLL FOR NEXT