தவெக அரசின் அதிரடி அறிவிப்புக்கு பரந்தூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பரந்தூர் பகுதி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் விஜய் மூன்று முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். வருடத்துக்கு 3 சிலிண்டர்கள் மற்றும் மாநகர, நகராட்சிப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்ற திட்டத்தை அறிவித்ததோடு, பரந்தூர் விமான நிலையத் திட்டம் அரசால் அதிகாரப்பூர்வமாக கைவிடப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல் அமைச்சர் விஜய் கூறும் போது, பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கெனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்.
துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் உடன் கலந்துரையாடி விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களில் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புதிய விமான நிலையத்துக்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும். சென்னை - மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து, அதன் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்ட ‘டர்மினல் 5’ ஐந்தாவது பயணிகள் முனையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல தற்போது நடைபெறும் ‘டர்மினல் 3’ கட்டுமான பணிகள் முடிவுற்ற பின் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் இருக்கும். டர்மினல் 5 பணிகள் நிறைவடைந்து, அது செயலாக்கத்துக்கு வந்த பிறகு ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளை கையாளக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் சென்னை விமான நிலையம் மேம்படுத்த படுவதோடு, பயணிகளின் போக்குவரத்து தேவை புதிய விமான நிலையம் அமைக்கப்படும் வரை உறுதி செய்யப்படும்’என்று தெரிவித்தார். தவெக அரசின் அதிரடி அறிவிப்புக்கு பரந்தூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பரந்தூர் பகுதி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.