தமிழக செய்திகள்

அழகிரி மகள் கயல்விழி புகார்: வங்கி மேலாளர் ஆஜராக உத்தரவு

வங்கி மேலாளர் அவமரியாதையுடன் திட்டியதாக கயல்விழி அழகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

சென்னை,

முன்னாள் அமைச்சர் அழகிரி மகள் கயல்விழியை அவமதித்த வங்கி மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அடையாறு கஸ்தூா்பா நகா் 3-வது பிரதான சாலையில் முன்னாள் அமைச்சர் அழகிரி மகள் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் என்ஆா்ஐ கிளை இயங்கி வருகிறது. இந்தக் கட்டிடத்தில் உள்ள மின்தூக்கி (லிப்ட்) பழுதடைந்தது குறித்து கயல்விழியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட வங்கி மேலாளர் குரலை உயர்த்தி கத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, விளக்கம் அளிக்க ஜூலை 20-ம் தேதி வங்கி மேலாளர் ஹர்ஷின் சிங்கை சந்திக்க சென்றபோது, அனைவரும் முன்னிலையிலும் தன்னை அவதூறாகவும், அவமரியாதையுடன் திட்டியதாக கயல்விழி அழகிரி, சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்யவும், கண்காணிப்புக் கேமிரா பதிவுகளை பத்திரப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி கயல்விழி அழகிரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, வங்கி மேலாளர் ஹர்ஷின் சிங்கை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்துள்ளார்.

இதனிடையே வங்கி மேலாளரை தாக்கியதாக கயல்விழி அழகிரி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், சாஸ்திரி நகர் போலீசார், ஐகோர்ட்டு உத்தரவுப்படி சைதாப்பேட்டை 9-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT