சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக மாநில அரசே சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் சமூகநீதி சர்வேவுக்கு ஆதரவாக ஒருமித்து குரல் கொடுத்துள்ள நிலையில், மக்களின் உணர்வுகளை மதித்து இந்தக் கோரிக்கையை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, இந்த நோக்கங்களுக்காக மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகவே சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசின் சார்பில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புத் தலைவர்கள் கூட்டத்தை சென்னையில் நேற்று நடத்தியது. எனது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆளும் த.வெ.க, அதிமுக, பாரதிய ஜனதா, காங்கிரஸ், நாம் தமிழர், த.மா.கா, தேமுதிக உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜியும் இதே நிலைப்பாட்டைத் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சாதிவாரி சர்வே நடத்தப்படுவதை ஆதரிப்பதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி (The Collection of Statistics Act, 2008) சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான தேவை எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இட ஒதுக்கீடுகளை பாதுகாப்பதற்கும், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் இந்த கணக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் தரவுகள் தான் அடிப்படையாக உள்ளன.
இந்தியாவில் இப்போது நடைமுறையில் உள்ள அனைத்து இட ஒதுக்கீடுகளும் 1931-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டவை. அதில் மாநில அரசுகள் ஏதேனும் மாற்றங்களைச் செய்யும் போது, அதை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள், நிகழ்காலத் தரவுகள் இல்லை என்று கூறி, இட ஒதுக்கீடுகளை செல்லாது என அறிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்தி, அதில் கிடைக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 16 ஆண்டுகள் ஆகியும் அது செயல்படுத்தப்படவில்லை. இத்தகைய சூழலில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது. 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிகழ்கால தரவுகள் சேகரிக்கப்பட்டால் தான் இனி இட ஒதுக்கீடுகளை பாதுகாக்க முடியும் என்பது உறுதி.
சமூகநீதி சர்வே நடத்தப்படும் போது, அதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களின் சமூக, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலைகள் தெளிவாக தெரிந்து விடும். அதை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்குத் தேவையான சமூகநீதி, வாழ்வாதார மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள முடியும். இதைக் கருத்தில் கொண்டு தான் தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்த உன்னத நோக்கங்களை எட்டுவதற்காக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிரெதிர் துருவங்களில் உள்ள கட்சிகள் கூட, அரசியல் வேறுபாடுகளை மறந்து விட்டு பங்கேற்றதும், சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கவை ஆகும். ஆட்சியில் இல்லாத கட்சிகளின் சார்பில் நடத்தப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் பொதுவாக எதிர்க்கட்சிகள் தான் கலந்து கொள்ளும். ஆனால், அந்த மரபை உடைத்து பாமக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆளுங்கட்சியின் பிரதிநிதி பங்கேற்றதும், சாதிவாரி சர்வேயை மாநில அரசு கண்டிப்பாக நடத்தும் என உறுதியளித்ததும் மக்கள் மத்தியில் சமூகநீதி சர்வே குறித்த நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்ட அதே நேரத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், த.வெ.க. அரசின் சார்பில் 436 இலக்குகளை எட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான த.வெ.க. தேர்தல் அறிக்கையில் உள்ள 319 வாக்குறுதிகளின் அடிப்படையிலான அந்த இலக்குகளில் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்துவதற்கான காலம் கனிந்து விட்டதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.
சமூகநீதி சர்வே நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்; அதற்கான அறிவிப்பை வரும் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் கவர்னர் நிகழ்த்தவுள்ள உரையில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் என்ற முறையில் எனது அழைப்பை ஏற்று அனைத்துக் கட்சி மற்றும் சமூகத் தலலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளும் த.வெ.க.வின் வீர. விக்னேஷ்வரன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சியின் எம்.ஏ.முத்தழகன், பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத் தலைவர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இயக்குனர் சோழன் மு. களஞ்சியம், அ.ம.மு.க.வின் முன்னாள் அமைச்சர் செந்தமிழன், சி.ஆர். சரஸ்வதி, தே.மு.தி.க.வின் வி.சி. ஆனந்தன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன்,
த.மா.கவின் விடியல் சேகர், முனவர் பாஷா, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை. ஜெகன் முர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் என்.ஆர். தனபாலன், மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் டாக்டர் ராஜா, தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கே.சி. திருமாறன்ஜி, தமிழர் தேசம் கட்சியின் நிறுவனர் கே.கே.செல்வக்குமார், இந்திய ஜனநாயகக் கட்சியின் சண்முகம், புதிய தமிழகம் கட்சியின் சங்கர் குரு, இந்திய தேசிய லீக் கட்சியின் தடா ரஹீம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு, வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அண்ணா சரவணன், பறையர் பேரவைத் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி,
தமிழ்நாடு யாதவ மகாசபை இணைப் பொதுச் செயலாளர் என்.எஸ்.சேதுமாதவன், நாடார் மகாஜன சங்கத்தின் ஏ.வி.எஸ். மாரிமுத்து, விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டம்மைப்பின் சண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள், குறவர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த கே.செல்வராசன், மிழலை நாடு மக்கள் கட்சியின் விவேகானந்தன், கொங்கு மக்கள் முன்னணி கட்சியின் சி.ஆறுமுகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிரஞ்சீவி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் முத்து கிருஷ்ணன், ஆதித்தமிழர் பேரவையின் கோவை ரவிக்குமார், வீரபத்திர ராஜகுல பேரவையின் தா. வசந்தன், தமிழ்நாடு நாடார் சங்கத்தின் சௌந்திரகுமார் நாடார் ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைக்கும் முழு ஆதரவு தெரிவிப்பதாக தொலைபேசி மூலம் தெரிவித்த திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கும், கூட்டத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜிக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக இந்த அமைப்புகளுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியின் பயணம் தொடரும் என்பதையும் இந்தத் தருணத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.