கல்லறைகளில் சிறப்பு பிரார்த்தனை 
தமிழக செய்திகள்

அன்னவாசல் பகுதியில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

பங்குத் தந்தையர்கள் அனைத்து கல்லறைகள் மீதும் புனிதநீர் தெளித்து புனிதம் செய்தனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மற்றும் ஆலங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

கல்லறை திருநாள்

கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி அந்நாளில் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதிகளில் அன்னவாசல், இலுப்பூர், பெருஞ்சுனை, வயலோகம், அம்மாசத்திரம், பொம்மாடிமலை, மேலூர், இரும்பாளி, பசுமலைப்பட்டி, மகுதுப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி மாதாகோவில், சாத்தம்பட்டி பகுதிகளில் உள்ள கல்லறை வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டன. இன்று காலை முதலே அங்கு சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. மனம் உருகி பிரார்த்தனை திருப்பலி, இறைவார்த்தை வழிபாடு, மறையுரை, நற்கருணை வழிபாடு ஆகியவை நடைபெற்றன.

கல்லறைகளில் பிரார்த்தனை

அதைத்தொடர்ந்து பங்குத் தந்தையர்கள் அனைத்து கல்லறைகளையும் புனிதநீர் தெளித்து புனிதம் செய்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தங்களது முன்னோர்களின் கல்லறையை மல்லிகை, ரோஜா, சம்மங்கி உள்பட பல்வேறு மலர்களால் அலங்கரித்து அவர்கள் விரும்பி உண்ணும் உணவுகளை படைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தனர். திருநாள் சிறப்பு திருப்பலியும் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

ஆலங்குடி

இதேபோல் ஆலங்குடி பகுதியில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். சிலர் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு உணவுகளை வழங்கினர்.

பங்குத்தந்தையர்கள் ஆலங்குடி சுற்றுவட்டார கோவில் பங்குகள் சார்பாக ஒவ்வொரு கிராமமாக சென்று அனைத்து கல்லறைகள் மீதும் புனித நீர் தெளித்து புனிதம் செய்தனர்.

SCROLL FOR NEXT