சென்னை,
தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள நிலையில் காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழகத்தின் காற்றாலை மின்சார உற்பத்தி நாளுக்குநாள் அதிகரித்து புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் சார்பில், 9,500 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன் ஆகும்.
இந்த காலகட்டத்தில் தினமும் சராசரியாக, 8 கோடி யூனிட் மின்சாரமும், சீசன் இல்லாத காலத்தில், 1 கோடி யூனிட் வரையும் மின்சாரம் கிடைக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி 12.38 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்தது. இதுவே, காற்றாலை மூலம் ஒருநாள் கிடைத்த உச்சபட்ச மின் உற்பத்தி அளவாக இருந்தது. நடப்பு ஆண்டு தற்போது காற்று வேகம் அதிகம் உள்ளதால், அதற்கு ஏற்ப, சில தினங்களாக காற்றாலை மின் நிலையங்களில் இருந்து, தினமும் 10 கோடி யூனிட்களுக்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (3ம் தேதி) எப்போதும் இல்லாத அளவாக ஒரேநாளில் 12.43 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்துள்ளது.
மேலும், ஜூன் 29ம் தேதி 10.93 கோடி யூனிட், 30ம் தேதி 11.51 கோடி, கடந்த 1ம் தேதி 11.80 கோடி, 2ம் தேதி 11.88 கோடி, 3ம் தேதி 12.43 கோடி யூனிட் என தொடர்ந்து 5 நாட்கள் தினமும் 10 கோடி யூனிட்களுக்கு மேல் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.
காற்றாலை மின் உற்பத்தி மூலம் தொடர்ந்து 5 நாட்கள் 10 கோடி யூனிட்டுக்கு மேல் மின்சாரம் கிடைப்பது இதுவே முதல்முறையாகும்.