தமிழக செய்திகள்

திமுகவுடன் கூட்டணி, பாஜகவும் ஆதரவு என்றார் எடப்பாடி பழனிசாமி: சிவி சண்முகம் பரபரப்பு பேச்சு

விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் ஆக்குகிறோம் என்ற நிலைப்பாட்டை திமுக எடுத்தது என்று சிவி சண்முகம் கூறினார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் அதிமுக எம்.எல்.ஏ சிவி சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

தமிழகத்திற்கே மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று வந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை முதல் அமைச்சர் ஆக்கலாம் என்ற யாரும் நினைத்து பார்க்காத, சிந்திக்காத ஒரு அரிய வாய்ப்பு. திருமாவை முதல்வர் ஆக்கலாம் என திமுகவால் முன்மொழியப்பட்டது. திமுக உடன் கூட்டணி முடியாது. திருமாவுக்காக செய்யலாம் என சம்மதித்தோம். திருமாவளவன் முதல்வராக இருக்க, அமைச்சரவையை திமுக, அதிமுக எடுத்துக் கொள்ளலாம் என்று பரிந்துரை வந்தது. ஆனால், திருமாவளவன் முதல்வர் என்பதையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். ‘நான்தான் முதல்வராகப் போகிறேன்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று நாங்கள் கூறியபோதும், அதையும் ஏற்கவில்லை. திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். திமுகவுடன் கூட்டணி, பாஜகவும் ஆதரவு அளித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திமுகவின் எதிர்ப்பு அடிப்படையிலேயே தவெகவுக்கு ஆதரவு அளிக்கிறோம். யாருக்கு பதவி ஆசை என்பதை எடப்பாடி பழனிசாமி மனசாட்சியைத் தொட்டு சொல்ல வேண்டும். கட்சியில் எந்தப் பிளவும் இல்லை. ரிசல்ட் அன்று வெற்றிச்சான்றிதழ் வாங்கிய உடன் 2 திமுக முன்னாள் அமைச்சர்கள் என் லைனுக்கு வந்து என்னென்னமோ பேசினார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் மறுநாள் காலையில்தான் ஈபிஎஸ் ஆட்சியமைக்க போகிறோம். திமுக ஆதரவு கொடுக்கும் என சொன்னார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. அந்த 2 முன்னாள் அமைச்சர்கள் யாரென்று கேட்காதீர்கள். நான் சொல்ல மாட்டேன்

பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் சட்டமன்றக்குழு தலைவர் எஸ்.பி வேலுமணிதான். சட்டமன்றத்தின் நிர்வாகத்தில் அரசியல் கட்சிகளின் உத்தரவு செல்லாது . எடப்பாடி பழனிசாமி கொடுத்து இருப்பது போலிக்கடிதம். எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்துதான் கொறடாவை நியமிக்க முடியும். பொதுச்செயலாளர் கொறடாவை நியமிக்க முடியாது” இவ்வாறு அவர் கூறினார்.