கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

விண்வெளி துறையில் தனியார் துறையை அனுமதிப்பது வரவேற்கத்தக்கது - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

குலசேகரப்பட்டினத்தில் ஏவுகணைகள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியும் தொடங்குவதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதுக்கோட்டை,

விண்வெளி துறையில் தனியார் துறையை அனுமதிப்பது வரவேற்கத்தக்கது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இஸ்ரோ முன்னாள் தலைவரும், தமிழ்நாடு அரசின் பாடத்திட்ட வழிகாட்டு குழு தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இஸ்ரோவால் பலதரப்பட்ட விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது மனிதனை விண்ணிற்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது. மிகவும் சிக்கனமாக விண்கலம் தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது தனியார் பங்களிப்புடன் செயற்கைக்கோள் தயாரிக்கும் பணியில் இஸ்ரோ இறங்குவதற்கு தயாராக உள்ளது.

ஆரோக்கியமான போட்டி

குலசேகரப்பட்டினத்தில் ஏவுகணைகள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியும் தொடங்குவதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும் என்று தனியார் பங்களிப்புடனும் இது நடைபெற வேண்டும் என்று இஸ்ரோ மற்றும் மத்திய அரசு முயற்சிகளை எடுத்துள்ளது. இதுவரை மத்திய அரசு, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஏவுகணைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது. தற்போது தனியார் பங்களிப்புடன் இது நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

விண்வெளித் துறையில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. அரசுத்துறை இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தி வந்தாலும், தனியார் துறை வந்தால் இன்னும் ஆரோக்கியமான போட்டிகள் வந்து அதிக தயாரிப்புகளை நாம் செய்ய முடியும். ஆகையால் விண்வெளி துறையில் தனியார் துறை வருவது என்பது தவறு கிடையாது.

2 மொழிகளில் திறன்

தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் திறன்பட மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. வகுப்பறைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கரும்பலகையை தாண்டி ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பதற்கு நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சரியாக புரிதல் இருந்தால் எந்த பாடத்திட்டத்திலும் மாணவர்கள் திறம்பட செயல்படலாம். எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியும். போட்டி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை விரைவில் எடுக்க போகிறோம். புத்தகத்தை எவ்வளவு எளிதாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறோம்.

போட்டி தேர்வுகளில் தோல்வி

3-ம் வகுப்பு முடிக்கும்போது மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுத, புரிந்து கொள்ள ஏதுவாக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்டம் விரைவில் உலகத்தரம் வாய்ந்ததாக மாறறப்படும்.

சி.பி.எஸ்.சி. மட்டுமல்லாது மற்ற நாடுகளில் உள்ள பாடத்திட்டங்களையும் ஆய்வு செய்து நமது மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போட்டி தேர்வுகளில் தோல்வியுற்றால் விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். அதை தடுப்பதற்கு உளவியல் ரீதியாகவும் மனரீதியாகவும் மாணவர்களை தயார் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.