சென்னை,
மக்களின் நீராதாரத்தைக் காக்க வேண்டிய அரசு, இயற்கை வளங்களைச் சுரண்டும் செயல்களுக்குத் துணை நிற்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டாரத்தில், விவசாயத்தின் ஆதாரமாகத் திகழும் பொன்பத்தி, சிங்கவரம், மேலச்சேரி, துறிஞ்சபூண்டி, மண்ணூர், ஆலம்பூண்டி, சாணிக்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஏரிகளில் வண்டல் மண், கிராவல் மண் எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீர்நிலைகளின் இயற்கை அமைப்பு சிதைவது ஏன்? நீர்நிலைகளைத் தூர்வாரி கொள்ளளவை மேம்படுத்த வேண்டிய நடைமுறை, தற்போது அவற்றின் இயற்கையான தரைப்பரப்பையே மாற்றும் அளவுக்குச் சென்றிருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பது மிகுந்த கவலைக்குரியது.
மழைக்காலத்தில் நீரைத் தேக்கி வைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, விளைநிலங்களுக்கு உயிர் கொடுக்கும் நீர்நிலைகள் தங்களது தன்மையை இழந்துவிட்டால், அதனால் பாதிக்கப்படுவது தலைமுறை தலைமுறையாக அந்தப் பகுதியை நம்பி வாழும் விவசாயக் குடும்பங்கள்தான்.
நன்மைக்கான திட்டம் வணிகச் சுரண்டலாக மாறியது எப்படி? அனுமதி திசைமாறியது எப்படி?
விவசாயத் தேவைக்காகவும் ஏரியின் கொள்ளளவை உயர்த்தவும் வழங்கப்பட்ட அனுமதி, கட்டுப்பாடற்ற வணிக நோக்கிலான வளச்சுரண்டலாக மாறியுள்ளது. குறிப்பிட்ட தேவைக்கான அனுமதி தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அதன் பாதிப்பு பல தலைமுறைகளைத் தாக்கும்.
அரசுத் துறைகளின் தொடர் கண்காணிப்பு நடைமுறையில் இருந்தும், விதிமீறல்கள் தடையின்றி நடப்பது எப்படி? என்ற கேள்வி எழுகிறது. பொதுச் சொத்தான நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் நிர்வாகம் காட்டிய அலட்சியமே இதற்கு முதன்மைக் காரணம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியும், நிர்வாகம் அதனை உடனடியாகக் கவனத்தில் கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.
செஞ்சி வட்டாரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள அனைத்து நீர்நிலைகளிலும் நடைபெற்ற மண் அகழ்வுப் பணிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி அதிகளவில் மண் அள்ளியவர்கள் மீதும், இதற்குத் துணைபோன மற்றும் கண்காணிப்புப் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் மீதும் பாரபட்சமின்றி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயற்கை அமைப்பு சிதைக்கப்பட்ட ஏரிப் பகுதிகளை உடனடியாக அறிவியல் முறையில் சீரமைக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற அனுமதிகளை வழங்கும்போது கடுமையான அளவுகோல்களையும், பொதுமக்கள் கண்காணிக்கும் வகையிலான வெளிப்படையான வழிமுறைகளையும் அரசு உருவாக்க வேண்டும்.
மக்களின் நீராதாரத்தைக் காக்க வேண்டிய அரசு, இயற்கை வளங்களைச் சுரண்டும் செயல்களுக்குத் துணை நிற்கக் கூடாது. செஞ்சி பகுதியில் நடைபெறும் விதிமீறல்களை உடனடியாகத் தடுத்து, நீர்நிலைகளையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.