தமிழக செய்திகள்

சென்னை போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் இன்று பதவியேற்கிறார்

அபின் தினேஷ் மோடக் சி.பி.சி.ஐ.டி கூடுதல் டி.ஜி.பி. ஆக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை,

தற்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றும் அபின் தினேஷ் மோடக் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக, கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜ் நியமிக்கப்பட்டார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்னை போலீஸ் கமிஷனராக பதவியேற்றுக்கொள்கிறார்.

புதிய போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், தமிழக காவல்துறையில் பல்வேறு முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். சிறந்த நேர்மையான அதிகாரி ஆவார். இவர் 1996-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக இந்திய காவல் பணியில் சேர்ந்தார்.

தமிழகத்தில் திருப்பூரில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக தனது பணியை தொடங்கினார். அதன்பிறகு பதவி உயர்வு பெற்று மதுரையில் துணை கமிஷனராக பணியாற்றினார். தர்மபுரி, தேனி, காஞ்சீபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்தார். ராமநாதபுரம், திருச்சி, சேலம் ஆகிய சரகங்களில் டி.ஐ.ஜி.யாகவும் சிறப்பாக பணியாற்றினார். ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சேலம், கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் கமிஷனர் பொறுப்பு வகித்துள்ளார். சென்னையிலும் கூடுதல் கமிஷனராக பணிபுரிந்துள்ளார். கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்ற பிறகு தாம்பரம் போலீஸ் கமிஷனராக 2 முறை பணியாற்றியுள்ளார்.

இவர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சொந்தக்காரர். இவர் இயற்பியல் பிரிவில் பி.எஸ்.சி. மற்றும் எம்.எஸ்.சி. பட்டபடிப்பு படித்துள்ளார். கல்லூரி மாணவராக இருந்தபோது இவர் ஹாக்கி விளையாட்டுப்போட்டியில் தலைசிறந்த வீரர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். கோவை, சேலம் நகரங்களில் இவர் கமிஷனராக பணியாற்றிபோது, அந்த நகரங்களில் கண்காணிப்பு கேமரா வசதியை உருவாக்கிக் கொடுத்தார்.

கோவை கமிஷனராக இருந்தபோது, அங்கு போலீஸ் மியூசியமும் அமைத்தார். சென்னையில் கூடுதல் கமிஷனராக பணியாற்றியபோது, சென்னை எழும்பூரில் போலீஸ் மியூசியம் அமைப்பதற்கும் இவர் உறுதுணையாக செயல்பட்டார். இவர் தலைசிறந்த பணிக்காக ஜனாதிபதி விருதுபெற்றுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் பதக்கமும் சிறந்த பணிக்காக இவருக்கு கிடைத்துள்ளது.

இவருக்கு சலீமா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் டாக்டராக உள்ளார். 'காவல்துறையினருக்கு வெற்றி தரும் மேலாண்மை பண்புகள், வெல்ல நினைத்தால் வெல்லலாம், சிறகுகள் விரித்திடு, போராட கற்றுக்கொள், வெற்றியாளர்களின் வெற்றிப்படிகள்' என்ற தலைப்புகளில் 5 புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.