சென்னை,
ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க. 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும் என கருத்துக்கணிப்பு கூறிய நிலையில், அந்த கருத்துக்கணிப்பு அப்படியே தலைகீழாக மாறிப்போனது. த.வெ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. 2-ம் இடமும், அ.தி.மு.க. 3-ம் இடமும் பிடித்தன.
த.வெ.க. 108 இடங்களை பெற்று இருந்தபோதிலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாமல் தவித்தது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு த.வெ.க. ஆட்சி அமைத்தது. தேர்தல் முடிவு வெளியான பிறகு முதல் திருப்பமாக இது இருந்தது. அடுத்ததாக சட்டசபையில் த.வெ.க. பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடந்தபோது அ.தி.மு.க. தரப்பில் வெற்றி பெற்று இருந்த 47 எம்.எல்.ஏ.க்களில், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்து அடுத்த திருப்பத்தை ஏற்படுத்தினார்கள்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்த 22 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களித்து இருந்தனர். இதனால் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. இதனையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி சார்ந்த நடவடிக்கைகளை கையில் எடுத்தார். இதனால் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்வது? என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனார்கள்.
இந்த நிலையில் அதில் சிலர் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்துள்ளனர். மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய 3 பேரும் நேற்று தங்களுடைய எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் இசக்கி சுப்பையா ராஜினாமா செய்ததை தொடர்ந்து அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்று, ராஜினாமா செய்ததால், திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளது. தற்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 4 பேரின் ராஜினாமாவை அடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.