தமிழக செய்திகள்

அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, அதிமுகவில் இருந்து விலகுவதாக தகவல்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா, 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

நெல்லை,

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக, எடப்பாடி அணி மற்றும் சண்முகம் அணி என இரு பிரிவாக பிரிந்தது. இதில் சண்முகம் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த சூழலில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியபாமா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அ.தி. மு.க. எம்.எல்.ஏ. ஜெயக்குமார், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் ஆகியோர் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.

இந்த நிலையில், அதிமுக சார்பில் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, அதிமுகவில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் தவெகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. இதனால் தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி அருகிறது.

யார் இந்த இசக்கி சுப்பையா.?

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டவர் இசக்கி சுப்பையா. இதில் காங்கிரஸ் மற்றும் தவெக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் ஏற்கெனவே 2011 மற்றும் 2021 சட்டசபை தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 2011ல் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா இவருக்கு அமைச்சர் பதவியை வழங்கி இருந்தார். இவர் அம்பாசமுத்திரம் தொகுதி மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.