தமிழக செய்திகள்

அம்பேத்கர் பிறந்தநாள்: 14-ந்தேதி அதிமுக சார்பில் மரியாதை

அம்பேத்கரின் 136-வது பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது.

சென்னை,

சட்ட மேதை அம்பேத்கரின் 136-வது பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

”சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 136-ஆவது பிறந்த நாளான 14.4.2026 செவ்வாய்க் கிழமை காலை 10.30 மணியளவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சென்னை, ஆற்காடு சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, கழக அவைத் தலைவரும், தமிழ் நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.