கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜாவுக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ், தனது செல்போனில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்தது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து, கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்வராயன்மலையில் உள்ள கிளாக்காடு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜா தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. மேலும் அதற்கான முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்றன.
ஆனால் நேற்று நடந்த முகாமில் மாவட்ட கலெக்டர் பத்மஜா பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கலெக்டர் பத்மஜா நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கும் செல்லவில்லை. மாறாக தனது முகாம் அலுவலகத்திலேயே இருந்து அலுவலக பணிகளை மேற்கொண்டார்.