சென்னை,
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவால் ஏற்கனவே 15 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப் பேர் கிராமத்தில் புனித பீட்டர் பால் கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 74 வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு 2 தனியார் மற்றும் 2 அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் .
இதில் சிகிச்சை பலனின்றி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் 11 பேர், அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் என 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 15 வயது சிறுமிகள் 2 பேரும் அடங்குவர். உயிரிழந்தவர்களின் உடல்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது சொந்த மாநிலத்துக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 14 பேரின் உடல்கள் அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2 உடல்களை அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.