தமிழக செய்திகள்

அமோனியா வாயு கசிவு விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்வு

ஒடிசாவை சேர்ந்த அலத்தி மகாராண ஜுவாங்கா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர்,

அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஆலையில் இருந்து 500 மீட்டர் சுற்றளவு வரையிலான பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமோனியா வாயு கசிவு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப் பேர் கிராமத்தில் புனித பீட்டர் பால் கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 74 வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு 2 தனியார் மற்றும் 2 அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் 11 பேர், அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் என 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 15 வயது சிறுமிகள் 2 பேரும் அடங்குவர். உயிரிழந்தவர்களின் உடல்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது சொந்த மாநிலத்துக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு

இதைத் தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 4 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவை சேர்ந்த அலத்தி மகாராண ஜுவாங்கா என்ற பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சில தொழிலாளர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தடை செய்யப்பட்ட பகுதி

அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட ஆலையில் இருந்து 500 மீட்டர் சுற்றளவு வரையிலான பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆலைக்கு 300 கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி இன்று தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.