திருவள்ளூர்,
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையின் உரிமையாளர்கள் 2 பேர் உள்பட 4 பேரின் ஜாமீன் மனுக்களை திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப் பேர் கிராமத்தில் புனித பீட்டர் பால் கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 74 வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு 2 தனியார் மற்றும் 2 அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்த நிலையில், இன்று காலை மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சில தொழிலாளர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது சொந்த மாநிலத்துக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சூழலில், அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட ஆலையில் இருந்து 500 மீட்டர் சுற்றளவு வரையிலான பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆலைக்கு 300 கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி இன்று தொடங்க உள்ளது.
இதனிடையே, அமோனியா வாயு கசிவு விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளர்கள் 2 பேர் உள்பட 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைதான 4 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம், 4 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.