திருவள்ளூர்
திருவள்ளூரில் உள்ள ஆலையில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட சம்பவத்தில் செயின்ட் பீட்டர் பால் நிறுவனத்தின் நிர்வாகி டேனியல் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவு பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் செயின்ட் பீட்டர் பால் என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தை சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜோசப் ஜெகன் (வயது 48), மோகன் (59) ஆகியோர் நடத்தி வருகிறார்கள்.
இங்கு இரவு மற்றும் பகல் என இரண்டு ஷிப்டுகளில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகி றார்கள். இதில் பெரும்பாலானவர்கள் ஒடிசா, பீகார், அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். இங்கேயே தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை சுமார் 120 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனையடுத்து வாயுவை சுவாசித்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் அடுத்தடுத்து அவர்கள் மயங்கி விழுந்தனர்.
வாயு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல், வாந்தி, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. சிலருக்கு வாய், மூக்கு, கண் மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழிற்சாலை வளாகத்தில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தால் மயக்கம் அடைந்த 74 தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மஞ்சங்காரணை மற்றும் நெல்லூர் டோல் பிளாசா அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் மஞ்சங்காரணை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜூமானி ஜூவான் (19), மலோத்தி (20) ஆகிய 2 பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். இதற்கிடையே சிகிச்சை பெற்று வரும் வடமாநில தொழிலாளர்களை செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சர் குமார் நேரில் சந்தித்து அறுதல் கூறினார்.
இந்த சம்பவத்தில், செயின்ட் பீட்டர் பால் நிறுவனத்தின் நிர்வாகி டேனியல் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில், ஏற்கனவே 2 பெண்கள் பலியான நிலையில், சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.