தமிழக செய்திகள்

அமோனியா கசிவு; சம்பவ இடத்தில் அதிநவீன கருவிகளுடன் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

காற்று படலத்தில் அமோனியா வாயு எந்த அளவிற்கு கலந்திருக்கிறது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் 2 பேர் உயிரிழந்தனர்.

வாயுக்கசிவு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை தொழிலாளர்கள் பலர் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அமோனியா வாயுவை சுவாசித்த தொழிலாளர்கள் 70-க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று அனைவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

2 பேர் பலி

இந்நிலையில், அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே, அமோனியா வாயு கசிவால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம்

வாயு கசிவு ஏற்பட்ட இடத்தில் மருத்துவத்துறை, தொழிலாளர் நலத்துறை, தீயணமைப்பு துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வரும் சூழலில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தற்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

குறிப்பாக அந்த பகுதியில் காற்றில் எந்த அளவிற்கு அமோனியா வாயு கலந்திருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான அதிநவீன கருவிகள் அடங்கிய வாகனம் வரவைக்கப்பட்டிருக்கிறது.

தொழிற்சாலைக்கு உள்ளேயும், தொழிற்சாலையை சுற்றி சுமார் ஒரு 2 கி.மீ. வரையிலான இடங்களிலும் காற்று படலத்தில் அமோனியா வாயு எந்த அளவிற்கு கலந்திருக்கிறது என்பது குறித்து அதிநவீன கருவிகளின் உதவியுடன் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.