சென்னை,
முன்பு கல்லூரி விழாக்களுக்கு கல்வி, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகத்தில் சிறந்து விளங்குபவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு வந்தனர். ஆனால், சமீபகாலமாக இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்களை கல்லூரி விழாக்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதற்கு கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சில பட்டமளிப்பு விழாக்களில் போதிய தகுதியும் அனுபவமும் இல்லாதவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கச் செய்வதாகவும் உயர்கல்வித்துறையில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கல்லூரி விழாக்களுக்கு சிறப்பு விருந்தினர்களைத் தேர்வு செய்வதில் பின்பற்ற வேண்டிய தகுதிகள் மற்றும் விதிமுறைகள் குறித்து நிலையான வழிகாட்டுதல்களை வெளியிட உயர்கல்வித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் தகுதியானவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.