சென்னை,
டாஸ்மாக் மது விற்பனை அதிகரிப்பதை சாதனையாகக் கருத முடியாது என்றும், அது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
டாஸ்மாக் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை மற்றும் வருமானம் அதிகரித்து வருவதாக பெருமையாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மது விற்பனை அதிகரிப்பதை சாதனையாகக் கருதுவது வெட்கப்பட வேண்டிய விஷயம். இதனால் பொதுமக்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது? என்பதுதான் முக்கியமான கேள்வி.
தமிழகத்தில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 54 சதவீத மதுபாட்டில்கள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளன. இத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மதுபான விற்பனையாளர்கள் மத்தியில் நிலவும் குழப்பங்கள் விரைவில் சரிசெய்யப்படும். இதற்கான முழுமையான வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
தற்போது போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் போதைப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாகும்.
இதற்காக தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 204 தொகுதிகளில் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் மூலம் போதைப் பழக்கத்தில் இருந்து மீள விரும்புபவர்களுக்கு முறையான ஆலோசனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.