சென்னை,
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் ஆறாத வடுவாகவும், உலகத் தமிழினத்தின் மனசாட்சியை உலுக்கிய துயரமாகவும் நிலைத்துவிட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவு நாள் இன்று. தமிழீழ விடுதலைக் கனவைச் சிதைக்க, சிங்களப் பேரினவாத அரசு நடத்திய கோரமான மனிதவேட்டையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட அந்த கருப்பு தினத்தை நினைவுகூரும் வேளையில், உயிர்நீத்த அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
நான் நீண்டகாலமாகச் சுட்டிக்காட்டி வருவது போல, ஈழத்தில் நடந்தது சாதாரண உள்நாட்டுப் போர் அல்ல; அது திட்டமிடப்பட்ட ஒரு இனப்படுகொலை. இந்த கொடூரத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமானால், இலங்கை அரசு தனது போர்க்குற்றங்களுக்காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் ஒரு 'பன்னாட்டு நீதி விசாரணை' நடத்தப்பட வேண்டும் என்பதும், அதில் போர் குற்றவாளிகள் முறையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் எமது ஆணித்தரமான கோரிக்கையாகும்.
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவது வீண். 1948-ஆம் ஆண்டு முதல் இன்று வரை எந்தவொரு சிங்கள அரசும் தமிழர்களின் உரிமைகளை வழங்க முன்வரவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கான இறுதித் தீர்வை அவர்கள் கைகளிலேயே ஒப்படைக்க வேண்டும்.
ஈழத் தமிழர்களிடம் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் ஒரு 'சுதந்திரமான பொது வாக்கெடுப்பு' நடத்தப்பட வேண்டும். அந்த வாக்கெடுப்பில் மக்கள் என்ன முடிவை எடுக்கிறார்களோ, அதனை சர்வதேச சமூகம் நடைமுறைப்படுத்துவதுதான் அந்த மக்களுக்குச் செய்யப்படும் உண்மையான நீதியாகும். "தனித் தமிழீழமே ஈழத் தமிழர்களின் வாழ்வுக்கும், பாதுகாப்பிற்கும் உரிய ஒரே தீர்வு" என்ற அவர்களின் விருப்பத்தை உலகம் அங்கீகரிக்க இதுவே சரியான வழி.
ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதை நான் ஒருபோதும் நிறுத்தியதில்லை. நான் மட்டுமல்ல, என்னை பின்பற்றும் அனைத்து நிலை தொண்டர்கள் கூட ஈழத் தமிழர்களின் நலனுக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள். இந்திய அரசு தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, இந்த பன்னாட்டு விசாரணைக்கும், பொது வாக்கெடுப்பிற்கும் உலக அரங்கில் அழுத்தம் தர வேண்டும்.
அன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் சிந்தப்பட்ட இரத்தம் வீண் போகாது. ஈழ தமிழர்கள் இழந்த நிலத்தையும், உரிமையையும் மீட்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சி உலகத்தமிழர்களோடு தோளோடு தோள் நின்று போராடும்.
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.