சென்னை,
ஆனைமங்கலம் செப்புத்தகடுகள் தமிழகத்துக்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ளது என மத்திய மந்திரி கூறியுள்ளதை சு.வெங்கடேசன் எம்.பி. உறுதிப்படுத்தியுள்ளார்.
சோழர் காலத்தின் ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவாகக் கருதப்படும் ஆனைமங்கலம் செப்புத் தகடுகள், நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாகப் பாதுகாக்கப்பட்டிருந்தன. இந்த செப்புத் தகடுகள், இந்த ஆண்டு மே 16 அன்று ஹேக் நகரில் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய கலாச்சாரத் துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கு அந்தத் தகடுகளைத் தமிழ்நாட்டிற்குத் திருப்பித் தருமாறு கோரி ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தச் செப்புத்தகடுகள் நாகப்பட்டினத்தில் உருவானவை. அவை திரும்பக் கிடைத்ததில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளலாம் என்றாலும், ஒரு பாரம்பரியம் அதன் வரலாற்றுப் புவியியலுடன் இணைந்திருக்கும் போதுதான் அது முழுமையான அர்த்தத்தைப் பெறுகிறது. இந்தத் தகடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள கதை, டெல்டா, துறைமுகங்கள், கோவில்கள், மடாலயங்கள் ஆகியவற்றிலிருந்து பிரிக்க முடியாதது.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இந்த கடிதத்திற்குப் பதிலளித்து மத்திய மந்திரி ஷெகாவத் கூறியதாவது:
மீட்கப்பட்ட தொல்பொருட்கள் அவற்றின் சொந்த மாநிலங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு மீட்கப்பட்ட தொல்பொருட்கள், அவற்றின் தோற்றம் குறித்த பதிவேட்டைச் சரிபார்ந்த பின்னரும், நிறுவப்பட்ட நடைமுறையின்படியும் பொதுவாக அவற்றின் பூர்விக இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, வெங்கடேசன் எம்.பி. கூறியதாவது:
"இந்த விஷயம் குறித்து நான் பிரதமருக்கும் கடிதம் எழுதியிருந்தேன். கடந்த காலங்களில், நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவரப்பட்ட சில தொல்பொருட்கள் அந்தந்த மாநிலங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. தற்போது அமைச்சர் ஒரு கடிதத்தின் மூலம் இதை உறுதிப்படுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.