சென்னை,
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
நெதர்லாந்தின் லெய்டன் நகரில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, நமது பண்பாட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வரலாற்றுப் பயணத்தில் மிகுந்த வரவேற்பிற்குரிய முன்னேற்றமாகும். இந்த அரிய செப்பேடுகள் வெறும் தொல்பொருள் சின்னங்கள் அல்ல; தமிழர்களின் மகத்தான வரலாறு, பண்பாடு மற்றும் சோழப் பேரரசின் மகோன்னதத்தைப் பதிவு செய்த நிரந்தரச் சான்றுகள்!
கழகத் தலைவர் அண்ணன் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற போது, இச்செப்பேடுகளை தமிழ் நாட்டிற்கு மீண்டும் திரும்பக் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்ததுடன், மத்திய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தினோம். அனைவரின் தொடர் முயற்சிகளும் இணைந்து இன்று இத்தகையைப் பலனை அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியப் பிரதமர் அவர்களது நெதர்லாந்து பயணத்தில் இந்தப் செப்பேடுகள் ஒப்படைக்கப்படும் நிகழ்வினை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்.
அதே வேளையில், இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே ஆகும்! அதனை உணர்ந்து மத்திய அரசு இச்செப்பேடுகள் தமிழ்நாட்டிற்கே கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும். தமிழ்நாடு அரசும் உரிய வகையில் இதற்கான முயற்சிகளைத் தாமதமின்றி மேற்கொண்டு, இவ்வரிய வரலாற்று ஆவணங்கள் அதன் தாய்மண்ணான தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதை உறுதி செய்யவேண்டும். நமது பாரம்பரியச் செல்வங்கள், அவற்றின் வரலாற்றுடன் இணைந்துள்ள தமிழ்நாட்டு மக்களிடையே பாதுகாக்கப்பட்டு, மக்கள் அவற்றைக் காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.