தமிழக செய்திகள்

அன்பில் மகேஷ் கைது: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

அரசியல் காழ்ப்புணர்வோடு அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைதுசெய்யப்பட்டு இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதுசெய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!

தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த அன்பில் மகேஷை கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.

அன்பில் மகேஷ் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT