தமிழக செய்திகள்

அன்பில் மகேஷ் கைது எதிரொலி; இனி வரும் காலம் திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள்..! தவெக பதிவு

நடிப்பு அரக்கன் கைது செய்யப்பட்டுள்ளார் என தவெக ஐடி விங் எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இனி வரும் காலம் திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள்.. என தவெக ஐடி விங் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் பொறுப்பேற்றதிலிருந்து ஆறு மாதங்களில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளதாகவும் குழந்தைகள் காணாமல் போவதாகவும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் நேற்று கண்டனம் தெரிவித்த அறிக்கை வெளியிட்டிருந்தார். குறிப்பாக துப்பாக்கி ஹீரோ என பாராட்டியவர்கள் தற்போது துப்பில்லாத ஹீரோ என முதலமைச்சர் விஜயை விமர்சிப்பதாக கடுமையாக சாடி இருந்த நிலையில் பட்டு வேஷ்டி அணிவது கோட் சூட் போடுவது கான்வாயில் வலம் வருவது என மூடநம்பிக்கையிலிருந்து முதல்-அமைச்சர் விஜய் எப்போது வெளிவருவார்? எப்போது சட்டம் ஒழுங்கை சரிசெய்வார் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதனிடையே, தனியார் பள்ளிகளுக்கு நிரந்த அதிகாரம், பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கான அனுமதி மற்றும் பல்வேறு அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில், தவெக ஐடி விங் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

இனிவரும் காலம் திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள் என்று பதிவிட்டுள்ளது மேலும்,

"நாங்கள்தான் ஆலமரம்… யார் ஆண்டாலும் நாங்கள்தான் ஆளும் கட்சி" என்று ஆணவத்தில் கொக்கரித்த திமுகவின் முகத்திரை இன்று கிழிகிறதா?

ஒருபுறம், பள்ளி மாணவர்களின் கல்வியுடன் தொடர்புடைய விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டில் நடிப்பு அரக்கன் கைது! மறுபுறம், அரசு வேலைக்காகப் பல ஆண்டுகள் இரவு பகல் பாராமல் படிக்கும் இளைஞர்களின் கனவுகளைப் பணத்திற்காகச் சிதைத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மற்றொரு முன்னாள் அமைச்சரின் மறுஆய்வு மனு தள்ளுபடி!

மாணவர்களின் கல்வியையும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளையும் கூட ஊழலுக்கான வேட்டைக்காடாக மாற்றிவிட்டு, உத்தமர் வேடம் போடுவதற்குக் கூசவில்லையா Senior Generational abuser?

"கொள்கைதான் உயிர்" என்று மேடைகளில் முழங்கிவிட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதுதான் இந்தப் பண்ணையார் கட்சியின் வரலாறு!

ஆறே மாதத்தில் இந்த ஆட்சி முடிந்துவிடும் என்று ஏறும் கல்யாண மேடைகளிலெல்லாம் மைக் பிடித்துப் புலம்பும் Sweet Uncle!

இனி வரும் காலங்களில், திமுக ஒரு தீயசக்தி மட்டுமல்ல, ஊழலின் ஊற்றுக்கண் என்றும் மக்கள் பேசுவார்கள்! அதற்கும் சேர்த்து புலம்பித் தள்ளுங்கள்! என அதில் பதிவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT