தமிழக செய்திகள்

அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தில் குழப்பம்-அன்புமணி கண்டனம்

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் சமூகநீதி படுகொலை செய்யப்படுகிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை தகுதியில்லை என்று கூறி வேலை வழங்க மறுத்து திமுக அரசு திருப்பி அனுப்பியிருக்கிறது. வாரியத்தால் அறிவிக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்று போட்டித் தேர்விலும் வெற்றி பெற்றவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்க வேண்டிய தருணத்தில் தகுதி இல்லை என்று கூறி அவர்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 61 துறைகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடப்பட்டு, உரிய கல்வித்தகுதி கொண்டவர்களுக்கு கடந்த திசம்பர் 27-ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அதன்பின் 50 நாள்களாகியும் முடிவுகள் வெளியிடப்படாததைக் கண்டித்து கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன்பின் அவசர, அவசரமாக செயல்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் மொத்தம் 61 துறைகளில் வரலாறு கல்வியியல், மனித உரிமைகள், இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், கடல் உயிரியல், வனவிலங்கு உயிரியல் ஆகிய 5 துறைகளில் 13 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான முடிவுகளை மட்டும் வெளியிட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவற்றை கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய நிலையில், வெறும் 5 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13-ஆம் தேதி வழங்கினார்.

5 துறைகளில் 13 பேர் உதவிப் பேராசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், வெறும் 5 பேருக்கு மட்டும் பணி நியமனச் சான்றுகள் வழங்கப்பட்டது எவ்வாறு? என்பது குறித்து விசாரித்த போது தான், இதன் பின்னணியில் நடந்த குளறுபடிகள் தெரியவந்தன. முடிவுகள் அறிவிக்கப்பட்ட 5 துறைகளில் இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் தவிர மீதமுள்ள 4 துறைகளைச் சேர்ந்த 11 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உயர்கல்வித்துறை முடிவு செய்தது. தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பில் பலர் பகுதி நேர முனைவர் பட்டம் பெற்றது தெரியவந்ததாவும், அவற்றின் செல்லத்தக்க தன்மை குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு கல்லூரிக் கல்வி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், பகுதி நேர முனைவர் பட்டம் என்பது வழக்கமான முனைவர் பட்டத்திற்கு இணையானது அல்ல என்று கல்லூரிக்கல்வி ஆணையர் கூறியதால் பகுதி நேர முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் உயர்கல்வித்துறை கடந்த 13-ஆம் தேதி பிறப்பித்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட மோசமான அபத்தமும், சமூகநீதிப் படுகொலையும் இருக்க முடியாது.

உயர்கல்வித்துறை சார்பில் 11.01.2021-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட 5-ஆம் எண் கொண்ட அரசாணையின் பிரிவு 4.1 கி. வீவீ-இல் உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டத்தை வழக்கமான முறையில் படித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதாகவும், பகுதி நேரமாக படித்து பெறப்பட்ட முனைவர் பட்டம், வழக்கமான முறையில் பெறப்பட்ட முனைவர் பட்டத்திற்கு இணையானது அல்ல என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் கல்லூரிக் கல்வி ஆணையர் கூறியுள்ளார். முழுநேர வகுப்பில் படித்து பெறப்பட்ட முனைவர் பட்டம் தான் வழக்கமான முனைவர் பட்டம்; பகுதி நேரமாக படித்து பெறப்பட்ட முனைவர் பட்டம் வழக்கமான முனைவர் பட்டம் அல்ல என்ற கல்லூரிக் கல்வி ஆணையரின் அரைகுறை புரிதலே அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்.

வழக்கமான முனைவர் பட்டம் என்றால் என்ன? என்பது குறித்த சர்ச்சைகளும், குழப்பங்களும் கடந்த காலங்களில் பல முறை எழுந்துள்ளன. இது தொடர்பாக எழுப்பப்பட்ட ஐயங்களுக்கு 10.03.2017-ஆம் நாளிட்ட பொது அறிவிப்பில் பல்கலைக்கழக மானியக்குழு விளக்கம் அளித்துள்ளது. “பல்கலைக்கழகங்களின் விதிகளை பின்பற்றி முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ படித்து பெறப்பட்ட அனைத்து முனைவர் பட்டங்களும் வழக்கமான முனைவர் பட்டங்கள் தான். தொலைதூரக் கல்வி முறையில் பெறப்பட்ட முனைவர் பட்டங்கள் இந்த வகையில் சேராது” என்று அந்த பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு நேரத்தில் முனைவர் பட்ட ஆய்வை 3 முதல் 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டும்; பகுதி நேரத்தில் முனைவர் பட்ட ஆய்வை 4 முதல் 6 ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பதைத் தவிர இரண்டுக்கும் எந்த வேறுபாடுகளும் இல்லை.

பகுதி நேரமாக ஆய்வு செய்து பெறப்பட்ட முனைவர் பட்டம் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானது இல்லை என்றால், அரசு கல்லூரிகளிலும், அரசு பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் பேராசிரியர்களில் பாதிக்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில், பெரும்பான்மையினர் பணியில் சேர்ந்த பிறகு பகுதி நேரமாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருப்பார்கள். தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் இப்படி ஒரு காரணத்தைக் கூறி எந்த தேர்வருக்கும் பேராசிரியர் பணி மறுக்கப்பட்டதில்லை.

வழக்கமான முனைவர் பட்டம் என்றால் என்ன? என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு கல்லூரிக் கல்வி ஆணையருக்கு வழங்கப்பட்டாலும் அதை அவர் தன்னிச்சையாக முடிவு செய்திருக்கக் கூடாது. கல்வித் தகுதி தொடர்பான முடிவை ஐ.ஏ.எஸ். அதிகாரியால் எடுக்க முடியாது. கல்வியாளர்கள் குழுவை அமைத்து அவர்களிடம் இது குறித்து பரிந்துரை கேட்டிருந்தால், அவர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் பொது அறிவிப்பை சுட்டிக் காட்டி சரியான தீர்ப்பை வழங்கியிருப்பார்கள். ஓர் அதிகாரியின் அரைகுறை புரிதலால் உதவிப் பேராசிரியர் பணிக்கு போட்டித் தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி மறுக்கப் படுவதையும், அவர்களின் எதிர்கால வாழ்க்கை மீட்டெடுக்க முடியாதவாறு சீரழிக்கப்படுவதையும் ஏற்க முடியாது.

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் சமூகநீதி படுகொலை செய்யப்படுகிறது. பணி நியமனங்களில் குளறுபடிகள் நடக்கின்றன. காவல்துறை சார் ஆய்வாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் இரு முறை சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுகின்றன; டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்தப்படுவதற்கு முன்பே ரத்து செய்யப்படுகின்றன. இதற்கெல்லாம் காரணம் ஆட்சியாளர்கள் பொம்மைகளாக இருப்பதும், அதிகாரிகள் அவரவர் விருப்பப்படி முடிவெடுக்க அனுமதிக்கப்படுவதும் தான். இந்த நிலையை மாற்றி பணி வாய்ப்பு மறுக்கப்பட்ட 6 பேருக்கும் உதவிப் பேராசிரியர் பணி வழங்கப்பட வேண்டும். மீதமுள்ள உதவிப் பேராசிரியர் பணி நியமனங்களிலும் பகுதி நேரமாக படித்துப் பெறப்பட்ட முனைவர் பட்டத்தை வழக்கமான முனைவர் பட்டமாக அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெளிவான வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.