சென்னை,
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
செட்டிநாட்டு அரசரும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிறுவனருமான டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் பெயர்த்தியும் புகழ் பெற்ற கல்வியாளர் மற்றும் கொடையாளருமான டாக்டர் மீனா முத்தையா காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மீனா முத்தையா அம்மையார் தமது வாழ்நாள் முழுவதையும் கல்விக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். கல்வித்துறையிலும், கலைத்துறையிலும் அவர் ஆற்றிய சேவைகள் ஏராளம். கல்வி வளர்ச்சிக்காகவே செட்டிநாடு வித்யாஸ்ரம் என்ற பள்ளியை தொடங்கி நடத்தி வந்தார். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் நாள் 90-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடிய அவரை அதற்கு சில நாள்கள் முன்பாக நான் எனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வந்தேன். அம்மையாரின் மறைவு கல்வித்துறைக்கும், கலைத்துறைக்கும் பெரும் இழப்பு ஆகும்.
மீனா முத்தையார் அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.