தமிழக செய்திகள்

ராமதாஸ் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த அன்புமணி தரப்புக்குத் தடை

இந்த உத்தரவு வரும் காலத்திற்கும் பொருந்தும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு ஜூன் 4-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை,

பாமகவில் தந்தை-மகன் இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக கட்சி இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரியும், கட்சியின் தலைவராக தம்மை அறிவிக்கக்கோரியும் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை ராமதாஸ் தொடர்ந்த இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை 13வது உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள புதிய வழக்கில், அன்புமணி ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் தனக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பாமக தலைவராக சட்ட விரோதமாக அன்புமணி ராமதாஸ் நீடித்துவருவதாக தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் தனது புகழை பயன்படுத்துவதாகவும், தன் புகைப்படங்களை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும் பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தர்ம பிரபு முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து அன்புமணி தரப்பு 18 பாமக வேட்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி தர்மபிரபு, அன்புமணி ராமதாஸ் தரப்பினர், பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவு வரும் காலத்திற்கும் பொருந்தும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.