தமிழக செய்திகள்

ஆந்திரா கடத்தி சென்று 3 மாதங்களாக சிறுமியுடன் குடும்பம் நடத்திய லாரி டிரைவர் - போக்சோவில் கைது

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.

வேலூர்,

16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஆந்திராவுக்கு கடத்திச் சென்று 3 மாதங்களாக குடும்பம் நடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமியுடன் காதல்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வண்டறந்தாங்கல் சொரக்கால்பேட்டையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 31), லாரி டிரைவர். பிரகாசுக்கும் காட்பாடியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

3 மாதங்களாக தலைமறைவு

இதையடுத்து பிரகாஷ், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றார். கடந்த 3 மாதங்களாக இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காட்பாடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து 3 மாதங்களாக பிரகாஷையும், சிறுமியையும் தேடி வந்தனர்.

ரகசிய தகவல்

இந்த நிலையில் இருவரும் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக காட்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் ஆந்திரா சென்று தலைமறைவாக இருந்த பிரகாஷ் மற்றும் 16 வயது சிறுமியை மீட்டு காட்பாடிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

2 மனைவிகள்

விசாரணையில், பிரகாஷ் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றதும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மனைவிகளும், 5 குழந்தைகளும் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து லாரி டிரைவர் பிரகாஷை போலீசார் கைது செய்தனர். சிறுமியை காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT