சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட த.வெ.க. தலைவர் விஜய், 2 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் அவர்கள் பெற்ற மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கும், நல்வாழ்விற்கும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கும் அவர் மேற்கொள்ளும் முயற்சிகளில் எல்லா வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.