கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அங்கன்வாடி மையங்களை முறையாக ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் - வானதி சீனிவாசன்

அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தைகளை பொறுப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் அங்கன்வாடி ஊழியர் ஒருவர் குழந்தையை சாக்குப் பையால் மூடி மிரட்டும் காணொளி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. குழந்தைகள் தாய்க்கு அடுத்தபடியாக முதன்முறையாக தனியாக வெளியில் செல்வது அங்கன்வாடி மையங்களில் மட்டுமே.

அங்கன்வாடியில் முதன்முறையாக வாழ்க்கையை கற்றுக் கொள்ளும் குழந்தைகளின் இரண்டாம் தாயாக விளங்கும் அங்கன்வாடி ஊழியரே இதுபோன்று நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் ஏற்கனவே பெண்குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பில்லா சூழலில் அவர்களுக்கு தைரியத்தையும், ஒழுக்கத்தையும், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களையும் அடிப்படையில் கற்றுக் கொடுக்கும் அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தைகளை பொறுப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தமிழக அரசும் உடனடியாக அனைத்து அங்கன்வாடி மையங்களையும் முறையாக ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.