தமிழக செய்திகள்

மனைவியுடன் பேசியதால் ஆத்திரம்: பால் பண்ணை உரிமையாளர் வெட்டிக்கொலை - விவசாயி கைது

பால் பண்ணை உரிமையாளரை வழிமறித்த ரமேஷ், தனது மனைவியுடன் பேசி வருவது தொடர்பாக தட்டிக்கேட்டார்.

தேனி,

தேனி அருகே உப்புக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் நாகபாண்டி (45 வயது). இவர் சொந்தமாக அப்பகுதியில் பால்பண்ணை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45 வயது). விவசாயி. இந்த நிலையில் ரமேசின் மனைவியிடம், நாகபாண்டி அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த ரமேஷ் தனது மனைவி மற்றும் நாகபாண்டியை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்கள் கேட்காமல் தங்களது பேச்சை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் நாகபாண்டி டீக்கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ரமேஷ், தனது மனைவியுடன் பேசி வருவது தொடர்பாக தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நாகபாண்டியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து நாகபாண்டியை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்த ரமேசை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.