திண்டுக்கல்,
மகளை கேலி செய்த வாலிபரை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் சங்கிலி முருகன் (38). கடந்த 10-ந்தேதி சங்கிலி முருகன் காணாமல் போனதாக செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, சங்கிலி முருகனின் உறவினர்கள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சங்கிலி முருகன் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் மறைக்கப்பட்டிருப்பது தொடர்பான அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் சாலையில் சங்கிலி முருகனை காரில் அழைத்துச் சென்று அவரது கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, உடலை மதுரை திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடிநீர் தொட்டியில் வீசியதாக தெரியவந்தது.
இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த பாக்கிய செல்வம், முருகன், மருதுபாண்டி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், குடிநீர் தொட்டியில் இருந்து சங்கிலி முருகனின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பாக்கிய செல்வத்தின் மகளை சங்கிலி முருகன் கேலி செய்ததும், இதுதொடர்பாக இரு குடும்பங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.