தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மது குடிக்க பணம் தராததால் மனைவியுடன் தகராறு செய்து, வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரம், அய்யாதுரை காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 40). வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்த இவர், தீவிர குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் தனது மனைவி முத்துலட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டு சண்டையிட்டுள்ளார்.
அதற்கு மனைவி பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து, மனைவியையும் குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு உள்ளே கதவை பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் கணவர் கதவைத் திறக்காததால், முத்துலட்சுமி தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டார். மீண்டும் இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோதும் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டே இருந்தது.
சந்தேகமடைந்து அருகிலிருந்த ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, இசக்கிமுத்து வீட்டில் உள்ள சீலிங் கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டின் பின்பக்க கதவைத் தள்ளி உள்ளே சென்று பார்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.