தமிழக செய்திகள்

அர்ச்சகர் சமுதாயத்தை அறநிலையத்துறை அமைச்சர் இழிவுப்படுத்திவிட்டார்: அனிதா ராதாகிருஷ்ணன்

அறநிலையத்துறை அமைச்சரின் இந்த செயல் அர்ச்சகர் சமுதாயத்தினரிடம் பெரும் மனவேதனையை ஏற்ப்படுத்தியுள்ளது என்று அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

புகழ்பெற்ற அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற சுவாமி தரிசனம் பெறுகின்றனர். வைகாசி விசாக திருவிழா நாளான இன்று சுவாமி தரிசனத்திற்காக விரதம் இருந்து காவடியேந்தி, பல நாட்கள் கால்நடையாக நடந்து வந்தும் சுவாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இந்நிலையில் திடீர் ஆய்வு என்ற பெயரில் புதியதாக பொறுப்பேற்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் காலங்காலமாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் அர்ச்சகர் சமுதாயத்தை சார்ந்த அர்ச்சர்களை இழிவுபடுத்தியது மிகவும் கண்டனத்திற்குறியதாகும்.

கோவில் அர்ச்சகர்கள்

பல நூற்றாண்டுகளாக திருச்செந்தூர் திருக்கோவிலில் வேண்டுதலுடன் வருகின்ற பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிகாட்டுதலும் உதவியும் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர். பல வெளி ஊர்களிலும் வெளி மாநிலங்களிலும் பல்வேறு குடும்பங்களுக்கு கட்டளை ஐயர்களாக அர்ச்சகர்கள் மரபுவழி பொறுப்பை நிறைவேற்றி வருகின்றனர். அறநிலையத் துறையை சார்ந்தவர் அல்லாத அர்ச்சகர்கள் காலம் காலமாக மரபுவழியாக இந்த சுவாமி தரிசன உதவியை செய்து வருகின்றனர். பக்தர்கள் தரும் தட்சனையை பெறுகின்றனர். இந்த நிலையில் அர்ச்சகர்கள் செய்யும் ஆன்மீக பணியை இழிவுபடுத்தியுள்ளார் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.

அறநிலையத் துறை அமைச்சரின் இந்த செயல் அர்ச்சகர் சமுதாயத்தினரிடம் பெரும் மன வேதனையை ஏற்ப்படுத்தியுள்ளது. மேலும் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிமுறை பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாதது சரியானதல்ல என்று ஊர் மக்கள் கருதுகின்றனர்.

திருச்செந்தூர் தொகுதி அனைத்து சமுதாய மக்களின் நலனை வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு 7-வது முறையாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது பணி இருந்துவரும் நிலையில் அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதோடு அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் புகழை சிறுமைப்படுத்திய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு எனது வன்மையான கண்டனத்தை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.