சென்னை,
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் திமுக சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் கடந்த மாதம் 20-ந் தேதி நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, அவர் பேசும்போது தமிழக முதல்-அமைச்சர் சினிமா நடிகைகளோடு ஜாலியாக இருந்தார். அவரை கொண்டு வந்து சட்டசபையில் உட்கார வைத்த உடன் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் என்று அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக த.வெ.க. கட்சி நிர்வாகிகள் ஆத்தூர் போலீ சில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மீது பி.என்.எஸ். 352 மற்றும் 353/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்பட்ட நிலையில், முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.