தமிழக செய்திகள்

அண்ணா பல்கலை. பி.எச்டி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.50 ஆயிரமாக உயர்வு: வரும் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், பல்கலை வளாக கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகள், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்பட 350-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் 150 இடங்களும், அரசு மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தலா 50 இடங்களும் என மொத்தம் 250 பி.எச்டி இடங்கள் உள்ளன.

என்ஜினீயரிங், தொழில்நுட்பம், மேலாண்மை உள்பட பல்வேறு பாடப்பிரிவுகளில், பி.எச்டி சேர்க்கைக்காக மாணவர்கள் https://cfr.annauniv.edu என்ற இணையதளத்தில் வரும் 28-ந் தேதிக்குள் (சனிக்கிழமை) விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே, பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் பி.எச்டி படித்த மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், அரசு என்ஜினீயரிங் மற்றும் உறுப்பு கல்லூரிகளில், முதல் முறையாக பி.எச்டி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT