தமிழக செய்திகள்

தமிழகத்தில் கொலை , பாலியல் வன்கொடுமை புள்ளி விவரங்களை தவறாக வெளியிடும் திமுக அரசு - அண்ணாமலை குற்றச்சாட்டு

உள்துறை மற்றும் காவல்துறைகளை நேரடியாகக் கையாளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் இது குறித்து பதில் கூற வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

நேற்றைய தினம், தமிழக அரசின் உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, தமிழகத்தில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டது திமுக அரசு.

ஆனால் அந்தத் தகவல்களைச் சரிபார்த்தால், தமிழக அரசு இந்த அதிகாரிகள் மூலம் கூறிய, 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை நாம் நம்ப முடியாது என்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியும்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் தேசிய குற்ற ஆவண பணியகம் வெளியிட்ட தகவல்படி, தமிழகத்தில் 1686 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் நேற்றைய தினம் உள்துறை செயலாளர் கூறும்போது, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்குகள் எண்ணிக்கை 1597 என்று குறைத்துக் கூறியிருந்தார்.

அதாவது, ஏற்கனவே திமுக அரசு தானே சமர்ப்பித்து, தேசிய அளவில் வெளியிடப்பட்ட 2021 புள்ளிவிவரங்களில் இப்படித் தவறான எண்ணிக்கையைக் கூறும்போது, இதுவரை சமர்ப்பிக்காமல் திமுக அரசு மறைத்து வைத்திருக்கும் 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை மக்கள் எப்படி நம்ப முடியும்?

ஏற்கனவே வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் இவர்கள் மாற்றிக் கூறும்போது, இன்னும் வெளியிடப்படாத 2024, 2025 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்கள் உண்மையா என்ற சந்தேகம் எழுகிறது.

முக்கியமாக, உள்துறை மற்றும் காவல்துறைகளை நேரடியாகக் கையாளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏன் அதிகாரிகளைப் பேசவைத்து பின்னால் மறைந்து கொள்கிறார்?

இந்த முக்கியமான விஷயங்களில் பதில் சொல்ல வேண்டியது அதிகாரிகள் அல்ல, முதல்-அமைச்சர் தான். தமிழக மக்களுக்கு நேர்மையான விளக்கத்தை வழங்குவது அவருடைய பொறுப்பாகும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.