சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடக்க உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையை வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதியில் போட்டியிட வைப்பதற்கு டெல்லி தலைமை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் அதில் அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்தது. இன்று காலை பாஜக தலைமை அலுவலகத்தில் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடந்த ஆலோசனையில் கூட இது குறித்து பேசப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதியில் அண்ணாமலையை போட்டியிட வைப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று டெல்லி தலைமைக்கு கடிதம் அளித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதியில் போட்டியிட வைக்க பாஜக டெல்லி தலைமை தமிழக பாஜகவிடம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவின் செல்வாக்கு அதிகம் உள்ள மாவட்டங்களில் எல்லாம் ஒரு தொகுதியை அதிமுக வழங்கியுள்ளது. அதன்படி கோவை வடக்கு தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என்று கூறப்பட்டுள்ள நிலையில் இங்கு அண்ணாமலையை போட்டியிட வைக்கும் முயற்சியில் பாஜக ஆலோசித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் கொங்கு மண்டலத்தில் உள்ள திருப்பூர் தெற்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிட வைத்தால் அண்ணாமலையின் வெற்றி எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும் பாஜக டெல்லி தலைமை மற்றும் தமிழக பாஜக வட்டாரத்தில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.